சனி, 6 பிப்ரவரி, 2016

சூப்பர் ஸ்லிம் ஃபுட்ஸ் 8

சூப்பர் ஸ்லிம் ஃபுட்ஸ் 8

ஸ்லிம்மாக இருக்க வேண்டும் என்பதே அனைவருடைய ஆசை. எத்தனை மணி நேரம் ஜிம்மில் நேரம் செலவழித்தாலும், வீட்டுக்கு வந்தவுடன் பசிக்கு தேவையான உணவை உடனே அள்ளி இரைத்து கொள்கிறோம். எந்தெந்த உணவுகள் உடலில் கொழுப்பையோ, அதிக எடையோ சேர்க்காது என்பதை தெரிந்து கொண்டால் உடல் எடை அதிகரிக்காமல் பராமரிக்க முடியும். ஸ்லிம்மாக இருக்க வைக்கும் லிஸ்ட்டில், இதோ 8 உணவுகள்.

நல்ல கொழுப்பை சேர்க்கும் 'பாதாம்'


நல்ல கொழுப்பு நிறைந்துள்ளது. உடலுக்கு தேவையான கொழுப்பை தரும். தேவையில்லாத கொழுப்பை உடலில் சேர விடாது. புரதம், வைட்டமின் இ, நார்ச்சத்து ஆகியவை நிறைந்துள்ளன. ஆரோக்கியமான நொறுக்கு தீனியாக சாப்பிடலாம். முன்னாள ஊறவைத்த பாதாமை தோல் உரித்து மறுநாள் சாப்பிடுவது நல்லது. ஒருநாளைக்கு ஐந்து பாதாம்களுக்கு மேல் சாப்பிடுவதை தவிர்க்கவும்.

பசி உணர்வை போக்கும் 'ஆப்பிள்'

ஆப்பிளில் உள்ள பெப்டின், மெதுவாக செரிமானமாக உதவும். வயிறு நிறைந்த உணர்வை தரும். ஆன்டிஆக்சிடன்ட், வைட்டமின் சி, நார்ச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்கள் இருப்பதால் பசியின்மை பிரச்னையை போக்கும். வாரத்தில் மூன்று நாட்கள், ஆப்பிளை சாப்பிடலாம்.

கொழுப்பு சேர்வதை தடுக்கும் 'வாழைப்பழம்'

வாழையில் உள்ள பொட்டாஷியம் சத்து, மாவு சத்தை உடலுக்குள் கிரகிக்க உதவும். வயிறு நிறைந்த உணர்வும், கல்லீரலில் கொழுப்பு சேராமலும் தடுக்கும். பசித்த வயிறுக்கு தேவையான கலோரிகள் கிடைப்பதால் அதிக அளவு உணவு சாப்பிடுவதற்கான வாய்ப்புகளை குறைக்கும். இரவு மட்டும் எடுத்துக்கொள்ளலாம். அதிகமாக எடுத்துக்கொள்ளக்கூடாது.

ஆற்றல் தரும் 'புரொகோலி'

புற்றுநோயை எதிர்க்க கூடியது, ஆரம்ப கட்டத்தில் உள்ள மார்பக புற்றுநோயை தடுக்கும் வல்லமை பெற்றது. நூறு கிராம் புரொகோலியில், 30 கலோரிகள் கிடைக்கும். இதனுடன் கால்சியம், நார்ச்சத்து கிடைப்பதால் உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைக்கும். ஸ்டீம் குக்காக புரொகோலியை தயாரித்து சாப்பிடுவது நல்லது.

எடையை பராமரிக்கும் 'பிரவுன் அரிசி'


ஆரோக்கியமான தானியங்களில் ஒன்று. பைடோநியூட்ரியன்ட்ஸ் இருப்பதால், புற்றுநோய், சர்க்கரை நோய், இதய நோய் ஆகியவை வருவதற்கான வாய்ப்புகள் குறையும். கொழுப்பை சேரவிடாத மாவு சத்துதான் இதில் உள்ளது என்பதால் தினமும் வெள்ளை அரிசிக்கு பதிலான பிரவுன் அரிசிக்கு மாறலாம். சீரான எடையை பராமரிக்க எளிய வழி.

கலோரிகளை குறைக்கும் 'கேரட்'

நீர் சத்து, நார்சத்து அதிகம் இருப்பதால் பசித்த நேரத்தில் சாப்பிட பசியும் போகும். தேவையான ஊட்டச்சத்துக்களும் கிடைத்துவிடும். கலோரிகளை எரிக்கும் கிவிக்கர் உணவாக இருக்கும். இதிலுள்ள பீட்டா கரோட்டீன் பார்வை திறனை கூர்மையாக்கும். உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

எடையை குறைக்கும் 'கொள்ளு'

இளைத்தவனுக்கு எள்ளு கொழுத்தவனுக்கு கொள்ளு என்று சொல்வதுண்டு. கொழுப்பை கரைக்க கூடியது கொள்ளு. கொழுப்பை எரிக்கும். உடலில் தேவையில்லாத கெட்ட கொழுப்பை கரைத்துவிடும். மாவுசத்துக்கள் கொழுப்பாக சேராமல் தடுக்கப்படும். இதய நோய், மூப்படைதல் ஆகியவை தடுக்கப்படும்.

எடையை பராமரிக்கும் 'அத்தி'


பிரெஷ் அத்தியில் அதிகளவு நார்ச்சத்து இருக்கும், செரிக்கும் போது ரத்தத்தில் மெதுவாக சர்க்கரையின் அளவு சேரும். இதனால் உடல் எடையும் அதிகரிக்காது. சர்க்கரையின் அளவை கட்டுக்குள்ளே வைத்திருப்பதால் அத்தி பழம் அல்லது ஜூஸாக அடிக்கடி பருகலாம்.

- ப்ரீத்தி

ஒரு நாளைக்கு எவ்வளவு நட்ஸ் சாப்பிடலாம்?

ஒரு நாளைக்கு எவ்வளவு நட்ஸ் சாப்பிடலாம்?

நொறுக்குத்தீனிகளுக்குப் பதிலாக நட்ஸ் வகைகளைச் சாப்பிடுங்கள் என்கிறார்கள் மருத்துவர்கள். பாதாம், பிஸ்தா, வால்நட் என நட்ஸ் வகைகளில் புரதச்சத்தும், நல்ல கொழுப்பும் நிறைந்திருக்கின்றன. இதய நோயைத் தடுக்க, கொலஸ்ட்ராலைக் குறைக்க, ஆற்றல் கிடைக்க நாம் நட்ஸ் வகைகளைச் சாப்பிடலாம்.

நட்ஸ் சாப்பிட வேண்டும் என்பதைப் பத்திரிகைகள், இணைய தளங்கள்,சமூக வலைதளங்கள், மருத்துவர்கள் மூலமாகத் தெரிந்துகொள்ளும் பலர் எவ்வளவு சாப்பிட வேண்டும் என்பதில் கவனம் கொள்வது இல்லை. தினமும், 100 கிராம் முதல் கால் கிலோ வரைகூட சிலர் நட்ஸ் கொறிக்கின்றனர். இது தவறு.  நட்ஸ் வகைகள் கலோரி நிறைந்தவை. 

நட்ஸ் நல்லது என்பதைக் கேள்விப்பட்டு, ஒரே நாளில் நூறு கிராம் நட்ஸ் உண்பதும், பிறகு ஒரு மாதத்துக்கு நட்ஸ் சாப்பிடாமல் இருப்பதும் நல்லது அல்ல. "தினமும் 20 கிராம் அளவுக்குச் சீராக நட்ஸ் சாப்பிடுவதே சிறந்தது" என்கிறார்கள் உணவியல் நிபுணர்கள். ஒரே நட்ஸ் வகையை மட்டும் 20 கிராம் சாப்பிடாமல், நட்ஸ் கலவையாகச் சேர்த்து, 20 கிராம் தினமும் சாப்பிட்டுவந்தால், ஊட்டச்சத்துக்கள் சரிவிகிதமாகக் கிடைக்கும்.

சாப்பிடும்போது, சாப்பிட்டு முடித்தவுடனும், சாப்பாட்டுக்கு முன்னரும்  நட்ஸ் சாப்பிட வேண்டாம். ஒரு உணவு வேளைக்கும் அடுத்த உணவு வேளைக்கும் இடையில், உணவு சாப்பிட்ட இரண்டு மணி நேரத்துக்குப் பின்பும், அடுத்த உணவு வேளைக்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்பும் நட்ஸ் சாப்பிடலாம். உதாரணமாக, ஒருவர் காலை 8 மணிக்கு காலை உணவையும், மதியம் ஒரு மணிக்கு மதிய உணவையும் சாப்பிடுபவராக இருந்தால் காலை 10 -11 மணி அளவில் நட்ஸ் சாப்பிடுவது நல்லது.

எதை எவ்வளவு சாப்பிட வேண்டும்?


இதில் ஒரு நாளைக்கு ஏதாவது ஒன்றிரண்டு அல்லது எல்லாவற்றையும் கலந்து 20 கிராம் என்ற அளவில் சாப்பிடலாம்.
பாதாம்  -  4 முதல் 7 (எண்ணிக்கையில்)

வால்நட் - 3 முதல் 5 (எண்ணிக்கையில்)

பேரீச்சை - 1 -2 (நடுத்தர சைஸ்)

பிஸ்தா  - அதிகபட்சம் 10 கிராம்.

உலர் திராட்சை - 10 (எண்ணிக்கையில்) 

முந்திரி - 5 முதல் 7 (எண்ணிக்கையில்) 

அப்ரிகாட் - 3 முதல் 5 (எண்ணிக்கையில்)

உலர் அத்தி  - இரண்டு

- பு.விவேக் ஆனந்த்

‘இனிப்பான’ வாழ்வுக்குப் பத்து கட்டளைகள்

நீரிழிவு நோயாளிகள் கவனத்தில் கொள்ள வேண்டிய 10 கட்டளைகள்:
1. நீரிழிவு முற்றிலும் குணமாகாது என்பதால் மாத்திரை, ஊசியோடு வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்.
2. மாதம் ஒருமுறை சாப்பாட்டுக்கு முன்னும் பின்னும் ரத்தப் பரிசோதனை, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ரத்தச் சர்க்கரை சராசரி அளவு சோதனை, ஆறு மாதங்களுக்கு ஒரு முறை ஈ.சி.ஜி., நெஞ்சு எக்ஸ்ரே மற்றும் கண் பரிசோதனை போன்ற தேவையான பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.
3. சுய மருத்துவம் கூடாது. மருத்துவரின் ஆலோசனைக்குப் பின்னரே மருந்துகளைப் பயன்படுத்த வேண்டும்.
4. அதிகாலை நாலரை முதல் ஆறு மணிக்குள் நடைப்பயிற்சி செய்ய வேண்டும்.
5. மாவுச்சத்தைத் தவிர்த்து நார்ச்சத்து உணவை அதிகரிக்க வேண்டும்.
6. பழங்களில் முக்கனியைத் தவிர்த்துக் கொய்யா, நாவல், பப்பாளி, அத்தி அதிகம் சேர்க்க வேண்டும்.
7. கீரைகளில் முருங்கை, அகத்தி, மணத்தக்காளி அதிகம் சேர்க்க வேண்டும். சிறுநீரகப் பிரச்சினை உள்ளவர்கள் பாலக் கீரையைத் தவிர்ப்பது நல்லது.
8. சிறு தானியங்களைச் சிதைக்காமல் உண்ண வேண்டும். கூழ், களி தவிர்க்கவும்.
9. உணவுத் தட்டில் காய்கறிகளும் பழங்களும் அதிகமாகவும் சாதம் குறைவாகவும் இருப்பது மிக அவசியம்.
10. தினசரி இரண்டு துண்டு பூண்டை, சாப்பாட்டுடன் சாப்பிட மாரடைப்பு மற்றும் கொழுப்பைத் தவிர்க்கலாம். கொடியில் வளரும் அனைத்துக் காய்கறிகளையும் சாப்பிடலாம்.
நன்றி: கோவில்பட்டி நீரிழிவு மருத்துவ நிபுணர் டாக்டர் இ.சா. தங்கப்பாண்டியன்