புதன், 27 ஜூன், 2012

ஆழ்துளைக் கிணறுகள் ஆபத்துக்கள்

அரியானா மாநிலத்தில், ஆழ்துளை கிணற்றில் விழுந்த ஐந்து வயது சிறுமியை, நீண்ட போராட்டத்துக்கு பின்னரும் காப்பாற்ற முடியவில்லை.- செய்தி

உண்மையில் நெஞ்சு பதறும் வகையில் இவ்வாறான செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டுதான் உள்ளது.யாரைத் குற்றம் சொல்ல?... ஆழ்துளை கிணறுகளில் குழந்தைகள் தவறி விழுந்து மரணங்கள் ஏற்படுவதைத் தடுக்க, பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை, சுப்ரீம் கோர்ட் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், உத்தரவாக வெளியிட்டுள்ளது. இந்த ஆணை பின்பற்றப்படுகிறதா என்பதுதான் பெரும் பிரச்சனை.


உடனடியாக கடுமையான சட்டங்கள் மற்றும் நெறிமுறைகள் தேவை.

புதன், 20 ஜூன், 2012

சில நினைவுகள்...

நம் வாழ்க்கையில் சில நினைவுகள் என்றும் மறக்க முடியாது. அவைகள் இனிமையானவை அல்லது கசப்பானவை என்றாலும் நமக்கு என்றும் நம் நினைவில் இருந்து கொண்டே இருக்கும். என் வாழ்க்கையிலும் அதுபோல் நிறையவே உண்டு.
Alwar and Me
My Friends


இவ்வுலகில் நாம் பிறரைச் சார்ந்தே இருக்கிறோம் என்பது எனக்கு புரிந்தும் புரியாமலும் இருந்த காலம் அது. இளங்கலை கல்லூரி படிப்பு முடித்து பிறகு பணிசெய்து கொண்டே படிக்கும் சூழலில், அங்கு நான் சந்தித்த எத்தனையோ பேர்களில் , நான் அதிகம் பழகி பேசியது நற்செய்தி ஆழ்வார் என்ற நண்பர். என் சொந்த ஊருக்கு அருகில் தான் அவரின் சொந்த ஊர். நாங்கள் இருவரும் ஒரே கல்லுரியில் படித்தவர்கள். இருந்தாலும் அவர் எனக்கு சீனியர். ஆனால் அவரிடம் பழகிய பொழுது அதெல்லாம் ஒண்ணும் தெரியவில்லை.


நாம் படிக்கும்பொழுதோ அல்லது வேலை செய்யும் பொழுதோ சிலரோடு ஒரே அறையில் தங்கி பழகி ஏற்படும் அனுபவங்கள் மறக்க முடியாதவை. நான் பழகிய ரூம்மேட்டுகளில் அதிக நாள் பழகியது இவர்கூடத்தான். குறைந்தது 5 - 6 வருடங்கள் இருக்கும். அவருடன் நான் தங்கி பழகிய நாட்கள் என் வாழ்வில் மறக்க முடியாது. அதேபோல் அவருடன் ஏற்பட்ட அனுபவங்கள் என்றும் இனிமையானவை. ரூமில் நாங்கள் அதிகம் பேசுவது அன்றாட நிகழ்வுகள் தான்.

நிறைய நாட்கள் இரவுகளில் அதிகம் பேசிக்கொண்டே இருப்போம். அரசியல் முதல் அன்றாடம் படிக்கும் சிறுகதை வரை நிறையவே. எங்களுக்குள் நிறைய விசயங்கள் ஒத்து போகும். அதேபோல் நிறைய தினசரி/மாத புத்தகங்கள் படிப்போம். அவருக்கு பிடித்த இளையராஜா பாடல்கள் எனக்கும் பிடிக்கும்.


அதேபோல் நிறைய இலக்கிய நாவல்கள் படித்து அது பற்றி நிறைய பேசுவோம். எழுத்தாளர் ஜெயகாந்தனின் 'சில நேரங்களில் சில மனிதர்கள்' நாவல் பற்றி அதிகம் பேசியிருக்கிறோம், அக்கதையின் முடிவு எங்களை பாதித்தது.


ம்ம்ம், அது ஒரு காலம் ... உண்மையில் நாம் வாழ்க்கையில் யாருடன் அதிகம் பழகுகிறோமோ, அவர்களிடமிருந்து நிறையவே கற்றுக்கொண்டுருப்போம். எழுத முடியாத நிறைய விசயங்கள் மனதில் உள்ளது...