வியாழன், 30 அக்டோபர், 2014

வேலை - வாழ்க்கை சமநிலையில் வைக்க ஐந்து வழிகள்!

சிலருக்கு வேலை செய்யும் அலுவலகம் தான் எல்லாம் என்று வொர்க்கஹாலிக் நபர்களாக இருப்பார்கள். சிலர் வேலை என்பது கடமைக்கு தான் எனக்கு வீடு தான் முக்கியம் என்று இருப்பார்கள். சிலர் எனக்கு இரண்டும் தான் முக்கியம் ஆனால் இரண்டையும் எப்படி சமாளிப்பது என்று புரியாமல் தவிக்கிறேன் என்பார்கள். இப்படி இருப்பவர்கள் வேலை வாழ்க்கை இரண்டையும் சமநிலையில் வைக்க என்ன செய்ய வேண்டும் என்பதற்கான வழிகள் இதோ...
 
 
1.நேரத்தை திட்டமிடுங்கள்!
 
உங்கள் நேரத்தை திட்டமிட்டு கொள்ளுங்கள்.இன்றைக்கு நீங்கள் அலுவலகத்தில் என்ன வேலை செய்ய வேண்டும் எவ்வளவு மணி நேரத்தில் இந்த வேலையை முடிக்க வேண்டும். ஒருவேளை உங்களுக்கான நேரம் குறைவாக இருந்தால் வேலையில் சற்று வேகத்தை கூட்டி வேலை செய்யுங்கள். அதேபோல் குறிபிட்ட நேரத்திற்கு மேல் ஒரு வேலையை எடுத்து செல்லாதீர்கள். குறிபிட்ட நேரத்துக்குள் முடிக்க முடியாத வேலை உங்களது இயலாமையை காட்டும். சரியான நேர திட்டமிடலில் வேலையை முடித்து உங்கள்: குடும்பத்துக்கு ஒதுக்க வேண்டிய நேரத்தை ஒதுக்குங்கள். அது உங்களுக்கு மகிழ்ச்சியையும் மறுநாள் வேலையை துவங்க புத்துணர்ச்சியையும் தரும்.
 
2.எனர்ஜியை வீணக்காதீர்கள்!
 
உங்கள் வேலையை சிறப்பாக செய்யவும், உங்கள் குடும்ப சூழலை சிறப்பாக கவனிக்கவும் நீங்கள் எனர்ஜியாக இருக்க வேண்டியது அவசியம். உங்கள் எனர்ஜியை குறைக்கும் வேலைகளை குறையுங்கள். உதாரணமாக நீங்கள் வேலை செய்ய வேண்டிய நேரத்தில் யாரவது ஒரு நண்பர் தொலைபேசியிலோ அல்லது சமூக வலைதளங்களிலோ உங்களை தொடர்பு கொண்டு பேசும்போது அவர்களை கூடியமட்டில் முக்கியமான விஷயம் இல்லையெனில் தவிர்க்க பாருங்கள். அந்த நேரம் உங்கள் வேலையை பாதித்தால் நீங்கள் வேலையை விட்டு செல்ல வேண்டிய நேரம் அதிகரிக்கும். அதனால் உங்கள் குடும்பத்தில் நீங்கள் செலவிட வேண்டிய நேரம் குறைந்து வேலை மற்றும் வாழ்க்கையில் பரபரப்பாக செயல்பட வேண்டிய சூழல் உருவாகும். உங்கள் எனர்ஜி மற்றும் நேரத்தை குரைக்கும் செயல்களை தவிர்த்தால் உங்கள் வேலை மற்றும் வாழ்க்கையை சமநிலையில் வைத்திருக்கலாம்.
 
3.எளிமை படுத்தி கொள்ள பழகுங்கள்!
 
நீங்கள் அலுவலகத்தில் பார்க்க வேண்டிய வேலைகளை முடிந்த அளவிற்கு எளிமையாக செய்ய பாருங்கள். உங்களுக்கு ஒருநாளில் இரண்டு வேலை மட்டும் தான் மறுநாள் நான்கு வேலை இருக்கிரது என்றால் இன்றைக்கு இரண்டு வேலை தான் பார்ப்பேன் என்று இல்லாமல் மறுநாள் வேலையில் சிலவற்றிற்கு இன்றைக்கே முன்னுரிமை அளியுங்கள். அப்போது இன்றும் மறுநாளும் உங்களால் சரியான் நேரத்தில் வேலையை முடித்து வீட்டிற்கு செல்ல முடியும். அதேபோல் வீட்டிற்கு சென்றதும் கணினியை திறந்து அலுவலக வேலைகளை பார்க்காமல் வீட்டில் குழந்தைகளோடும் மற்ற உறவினர்களோடும் நேரத்தை செலவழியுங்கள். அதேசமயம் வீட்டில் உள்ளவர்களுக்கு இரயில் டிக்கெட் புக் செய்ய ஸ்டேஷனுக்கு சென்று காத்திருக்காமல் ஆன்லைன் மூலமாக புக் செய்து உங்கள் குடும்பத்தோடோ அல்லது அலுவலகத்திலோ செய்யும் வேலைக்கு பயன்படுத்தி கொள்ளுங்கள்.
 
4. அலுவலகம் vs வீடு
 
அலுவலகத்திற்கு இவ்வளவு நேரம் தான் ஒதுக்க வேண்டும். வீட்டிற்கு இவ்வளவு நேரம் ஒதுக்க வேண்டும் என்பதை திட்டமிடுங்கள்  அதனை சரியாக் ஒதுக்கி கொள்ள திட்டமிடுங்கள். அந்த திட்டத்தை கூடியவரையில் கட்டாயப்படுத்தி கொள்ளுங்கள். அதில் மாற்றம் வர அனுமதிக்காதீர்கள். அப்படி அனுமதிக்கும்போது இரண்டையுமே நீங்கள் மன அழுத்தமாக உணருவீர்கள். அதனை தவிர்த்து உங்கள் கால அட்டவணையை சரியாக பிரித்து கொள்ளுங்கள். அது உங்கள் வாழ்க்கையில் சமநிலையை உண்டாக்கும்.
 
5.ஓய்வை மறக்காதீர்கள்!
 
நீங்கள் வாரத்தில் ஐந்து நாட்களோ அல்லது ஆறு நாட்களோ வேலைக்கு செல்பவராக இருக்கலாம். ஆனால் ஞாயிற்று கிழமை பொதுவாக விடுமுறையாக தான் இருக்கும். அதிலும் அலுவலக வேலைகளை பார்ப்பது, தனது சொந்த வேலைக்காக நேரம் ஒதுக்குவது என்று இல்லாமல் எந்த வித கவலையுமின்றி உங்கள் மனதையும், உடலையும் முழு ஓய்வுக்கு அனுமதியுங்கள் அது உங்களது அடுத்த வாரத்தை புத்துணர்ச்சியாக்கும்,
 
இந்த ஐந்து வழிகளை பின்பற்றினால் உங்கள் வேலை சமநிலையை அடையும். தேவையில்லாத அலுவலக மற்றும் வீட்டு பிரச்னைகளை சந்திக்காமல் நிம்மதியாக வேலையிலும் வீட்டிலும் கவனம் செலுத்தலாம்.
 
ச.ஸ்ரீராம்

ஞாயிறு, 19 அக்டோபர், 2014

உங்களுக்கு எத்தனை மதிப்பெண் ? நீங்களே செக் செய்துகொள்ளுங்கள் ..நேர்மையாக விடைகளை கமெண்ட் செய்யவும் .

உடற்பயிற்சி தொடர்ந்து செய்பவர்களுக்கு இதய நோய்கள், மாரடைப்பு, பக்கவாதம், டைப் 2 சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு 50 சதவிகிதம் வரை குறைகிறது. பெரியவர்கள், ஒரு வாரத்துக்கு குறைந்தது 150 நிமிடங்களும், 18 வயதுக்கு உட்பட்டவர்கள் ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு மணி நேரத்துக்கும் உடற்பயிற்சி செய்யலாம். உடல் ஆரோக்கியத்தைக் கவனிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் உடற்பயிற்சிகளில் எந்த அளவுக்கு அக்கறைகொள்கிறீர்கள்? உங்களை நீங்களே அறிந்துகொள்ளும் சுயபரிசோதனை இது.
1 ஒரு வாரத்துக்கான, உங்கள் வயதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட உடற்பயிற்சிகளை செய்கிறீர்களா?
அ. ஆம், இலக்கை அடைந்துவிடுகிறேன்
ஆ. கிட்டத்தட்ட அடைந்துவிடுவேன்
இ. பாதி அளவுக்கு செய்கிறேன்
ஈ. செய்வது இல்லை
2 ஒரு வாரத்தில் எத்தனை நாட்கள் குறைந்தபட்ச அளவிலாவது உடற்பயிற்சிகளை செய்கிறீர்கள்?
அ. எல்லா நாட்களும்
ஆ. ஐந்து முதல் ஆறு நாட்கள்
இ. மூன்று முதல் நான்கு நாட்கள்
ஈ. இரண்டு நாட்களுக்கும் கீழ்
3. போதுமான அளவு உடற்பயிற்சி செய்யவில்லை எனில், அதற்கு என்ன காரணம் என்று கருதுகிறீர்கள்?
அ. போதுமான நேரம் இல்லை
ஆ. சோர்வாக உள்ளது
இ. பயிற்சி கடினமாக உள்ளது
ஈ. உடற்பயிற்சியில் விருப்பம் இல்லை
4. மாடிப்படி ஏறி இறங்கும்போது எப்படி உணர்கிறீர்கள்?
அ. ஆரோக்கியமாக இருப்பதுபோல்
ஆ. மூச்சு வாங்குகிறது
இ. கடினமாக உள்ளது
ஈ. படி ஏறி இறங்குவதைத் தவிர்த்துவிடுவேன்
5. இதில் எந்தப் பயிற்சியை உங்களால் எளிதில் செய்ய முடியும்?
அ. 10 சிட்-அப்ஸ்
ஆ. ஐந்து பிரஸ் அப்ஸ்
இ. குனிந்து காலைத் தொடுவது
ஈ. எதையும் செய்ய முடியாது
6. ஒரு நாளில் எந்த அளவுக்கு ஆற்றலுடன் உள்ளதாக உணர்கிறீர்கள்?
அ. நாள் முழுவதும்
ஆ. போதுமான அளவுக்கு, இருப்பினும் இதை அதிகரிக்க விரும்பவில்லை
இ. போதுமான அளவுக்கு, சற்று சோர்வை உணர்கிறேன்
ஈ. நாள் முழுக்க சோர்வு
விடை
(அ- 3, ஆ-2, இ-1, ஈ-0)
15 மதிப்பெண்களுக்கு மேல்...
உங்கள் பதில்கள் அடிப்படையில் நீங்கள் ஃபிட்டான நபர். தொடர்ந்து உடற்பயிற்சிகள் செய்வது, ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்வதன் மூலம் இதய நோய் உள்ளிட்ட பிரச்னைகளைத் தவிர்க்கலாம்.
10 முதல் 14 மதிப்பெண்கள்...
நீங்கள் மனதுவைத்தால் ஃபிட்டான நபராக உங்களால் மாற முடியும். ஏற்கனவே ஆரம்பிக்கவில்லை எனில், வாரத்துக்கு ஐந்து நாட்களுக்காவது, ஒரு நாளைக்கு அரை மணி நேரத்துக்கு உடற்பயிற்சிகளில் ஈடுபடுங்கள். வெவ்வேறு பயிற்சிகளில் ஈடுபடுவதன் மூலம் ஆர்வம் தோன்றும்.
9- க்கும் கீழ்...
நீங்கள் ஃபிட்டான நபர் இல்லை. இதே நிலை நீடித்தால் மாரடைப்பு, சர்க்கரை நோய் போன்றவை உங்களைத் தாக்கலாம். மருத்துவரை ஆலோசித்து உங்களுக்கு ஏதேனும் பிரச்னை உள்ளதா என தெரிந்துகொள்ளுங்கள். அவர் ஆலோசனைப்படி உடனடியாக உடற்பயிற்சிகளை செய்யுங்கள். எளிய நடைப் பயிற்சி செய்தால்கூட போதுமானது.

வெள்ளி, 17 அக்டோபர், 2014

முதுகுவலி... முத்தான தீர்வுகள்!

முதுகுவலி... அனுபவிப்பவர்களுக்கே அதன் வேதனை புரியும். இயல்பான இயக்கத்தையே முடக்கும் அளவுக்கு ஆபத்துள்ள இந்நோயைப் பற்றி, விழிப்பு உணர்வுத் தகவல்களை வழங்குகிறார், எலும்பு முறிவு மற்றும் மூட்டு அறுவை சிகிச்சை நிபுணர் சண்முகசுந்தரம்.
''முதுகுவலி என்று சொல்வது, ஏதோ சிறிய பிரச்னையாகத் தோன்றலாம். உண்மையில் இது முதுகுத் தண்டுவடம் சார்ந்த பிரச்னை! கழுத்தில் உள்ள 7 எலும்புகள், மார்பகத்தின் பின்புறம் உள்ள 12 எலும்புகள், வயிற்றுப் பகுதியின் பின்புறம் உள்ள 5 எலும்புகள்... இவற்றை உள்ளடக்கியதே முதுகுத் தண்டுவடம். தண்டுவடத்தில் ஏராளமான நரம்புகள் உள்ளன. இதில் உள்ள நரம்புகள் மூளையிலிருந்து கை - கால்களுடன் இணைக்கப்படுகின்றன. இந்த எலும்பு, நரம்பில் ஏற்படும் பிரச்னைகளே ஒருவருக்கு முதுகுவலியை ஏற்படுத்தும்.
காரணங்கள்: அதிக நேரம் உட்கார்ந்தபடியே வேலை செய்வது, முறையான பொஸிஷனில் இல்லாமல் கனமான பொருட்களைத் தூக்குவது, பெண்களுக்கு கர்ப்பப்பை, நீர்ப்பை போன்றவற்றில் ஏற்படும் கிருமித்தொற்று, 40 வயதைக் கடந்த பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன் மாறுபாட்டால் எலும்புகளில் உண்டாகும் கால்சியம் குறைவு, குடல்நோய் பாதிப்பு, அதிக அயற்சி (ஸ்ட்ரெய்ன்), கிருமிகளின் தாக்குதல் (காய்ச்சல், வைரஸ், பாக்டீரியா தாக்குதல்), எலும்புப் புற்றுநோய்... இவையெல்லாம் முதுகுத் தண்டுவடத்தில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை என்பதால், முதுகுவலி வரலாம்.
வயது: எல்.கே.ஜி குழந்தைகள் முதல் கோலூன்றும் வயது வரை யாருக்கும் வரலாம்.
கண்டறிவது எப்படி: சிலருக்கு முதுகுவலியுடன் கூடிய கால்வலி வரக்கூடும். சிலர் இருமும்போது, தும்மும்போதுகூட முதுகுவலியை உணரலாம். சிலருக்கோ குறுகிய தூரம் நடப்பது மட்டுமின்றி, சிறிது நேரம் அமர்வதுகூட இயலாததாக இருக்கும். தண்டுவடத்தில் நாள்பட்ட பாதிப்பு கண்ட சிலருக்கு கூன் விழலாம். திடீரென முதுகுவலி வந்தால், சமீபத்திய ஏதாவதொரு செயலின் விளைவு என்று, தேவையான ஓய்வெடுப்பது போதுமானது. தொடர்ந்து முதுகுவலியால் பாதிக்கப்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டியது அவசியம். சாதாரண எக்ஸ்ரேவில் என்ன பிரச்னை என்பதைக் கண்டறிய முடியாது என்பதால், எம்.ஆர்.ஐ ஸ்கேன் அவசியம்.
சிகிச்சைகள்: ஆரம்பகட்டம் அல்லது பழக்கவழக்கத்தால் ஏற்பட்ட முதுகுவலி உள்ளவர்களுக்கு ஓய்வு, வலிநிவாரணி, நரம்புக்குத் தேவையான விட்டமின் மாத்திரைகள், மருத்துவ ஆலோ சனை சொல்லும் வாழ்க்கை முறை மாற்றம் போதுமானது. இதுவே, அதிகப்படியான பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு அறுவை சிகிச்சையே நிரந்தர தீர்வைத் தரும்.
இன்றைய காலகட்டத்தில், தண்டுவட பிரச்னைகளுக்கு மைக்ரோ, லேசர் சர்ஜரி என பல சிகிச்சைகள் மூலம் தீர்வு காணப்படுகிறது. அதேநேரத்தில் இத்தகைய சிகிச்சைகள் சரியான உடல்தகுதி உள்ளவர்களுக்கு மட்டுமே அளிக்கப்படுவதால் வேறுவிதமான பிரச்னைகள் எழ வாய்ப்பில்லை.
எவ்வளவு செலவாகும்: எம்.ஆர்.ஐ ஸ்கேன் போன்றவற்றுக்கு 3 ஆயிரம் முதல் 7 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும். ஆரம்பகட்ட பிரச்னை என்றால் மருந்து, மாத்திரை என சில ஆயிரங்கள் செலவாகும். அறுவை சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு 50 ஆயிரம் முதல் 2 லட்சம் ரூபாய் வரை செலவாகும். அரசு வழங்கும் காப்பீடு திட்டத்தின் மூலமாக இலவசமாகவும், குறைந்த செலவுடனும் செய்துகொள்ளமுடியும்.
வராமல் தடுக்க: நீண்ட நேரம் ஒரே இடத்தில், ஒரே பொஸிஷனில் அமர்ந்து வேலை செய்வதைத் தவிர்ப்பது, சேரில் அமர்ந்து வேலை செய்யும்போதும், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனம் ஓட்டும்போதும் 90 டிகிரி நேராக நிமிர்ந்து அமர்வது, குழந்தைகள் அதிக சுமை கொண்ட புத்தகப்பை தூக்குவதை தவிர்ப்பது, தினமும் குறைந்தது அரை மணி நேரம் உடற்பயிற்சி, நடைபயிற்சி, யோகா இவற்றில் ஏதாவது ஒன்று, வாரத்தில் இரண்டு நாட்கள் குறைந்தது 40 நிமிட நீச்சல் பயிற்சி, தினமும் சத்தான உணவு எடுத்துக்கொள்வது...
இந்தச் செயல்பாடுகள் எல்லாம் உங்கள் தண்டுவடத்துக்கு பாதிப்பு ஏதும் நேராமல் காக்கும். மேலும் முதுகுவலிக்கு மருத்துவ ஆலோசனை இன்றி நீங்களாகவே வலி நிவாரணி எடுத்துக்கொள்வது, பாதிப்பை அதிகப்படுத்துவதோடு, சிறுநீரகப் பிரச்னை வரை இழுத்துச் சென்றுவிடும். முதுகுவலிக்காக கடைகளில் கிடைக்கும் தைலங்கள், பாம் போன்றவற்றை பயன்படுத்துவது தற்காலிக தீர்வு மட்டுமே என்பதை மனதில் கொள்ளுங்கள்!''

எடை அதிகரிக்க செய்ய வேண்டியவை:

3 தோசையிலிருந்து 4, 5 என உணவின் அளவை மெதுவாக அதிகரிக்கலாம். 

ஒரு நாளைக்கு 6, 7 முறை உணவும், நொறுக்குத் தீனியும் சாப்பிடலாம்.

சுலபமாக செரிக்கும் உணவை சாப்பிடுவது நல்லது. ஏனெனில், சீக்கிரத்தில் செரித்து, 2 மணி நேரத்தில் மீண்டும் பசி எடுத்து, சாப்பிடத் தோன்றும்.

லிவ் 52 சிரப் அல்லது செரிமானத்துக்குரிய டானிக் வகைகள் கல்லீரலை வலுப்படுத்தி, பசியை அதிகப்படுத்திவிடும்.

கஞ்சியில் அதிக கலோரி இருப்பதால், அடிக்கடி கஞ்சி அருந்தலாம்!

நிம்மதியான தூக்கம் அவசியம் தேவை.

கேரட் ரகசியம்

பீட்டா கரோட்டின், நார்ச்சத்து, பாஸ்பரஸ் ஆகிய சத்துக்கள் இதில் நிறைய இருக்கின்றன. 

பொட்டாஷியம், ஃபோலிக் அமிலம், கோலின், கால்சியம், கார்போஹைட்ரேட், வைட்டமின் சி ஆகியவை ஓரளவும், மிகக் குறைந்த அளவு இரும்புச் சத்தும் இதில் உண்டு. 

கண், தோல் மற்றும் எலும்பு உறுதிபடவும், ரத்த விருத்திக்கும் மிகவும் நல்லது.

குழந்தைகள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், வயோதிகர்கள் எல்லோரும் சாப்பிடலாம். சர்க்கரை நோயாளிகள் அளவோடு சாப்பிட வேண்டும். துருவியும் சாப்பிடலாம். வெதுவெதுப்பான நீரில் போட்டு எடுத்து அப்படியே சாப்பிடலாம்.

நெல்லிக்காய் சாப்பிட்டால்


1.நெல்லிக்காயில் கால்சியம் சத்து நிறைய இருப்பதால், எலும்புகள் உறுதியாகும். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கவைக்கும். ரத்த சோகைக்கும் நெல்லிக்காய் நல்ல மருந்து. நெல்லிக்காய் தலைமுடியைக் கருமையாக செழிப்பாக வளரவைக்கும் என்பதால்தான் கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் எண்ணெய் வகைகளிலும் தலைச் சாயத் தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகிறது.

2.தினமும் ஒரு நெல்லிக்காய் உண்டுவந்தால், சர்க்கரைக் குறைபாட்டைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிடலாம். அதிக உடல் பருமனால் கஷ்டப்படுகிறவர்கள் காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய்ச் சாறுடன் இஞ்சிச் சாறு அருந்திவந்தால் தேவையற்ற எடை குறைந்து சிக்கென்ற தோற்றத்தைப் பெறலாம்.

3.நெல்லிக்காயுடன் புதினா, இஞ்சி, எலுமிச்சை சேர்த்து பழரசமாக்கி அருந்தினால் வயிற்றுக் கோளாறுகள் நீங்கும். காயங்களைக் குணப்படுத்தவும் புற்றுநோய் எதிர்ப்பு வல்லமையும் நெல்லிக்காய்க்கு உண்டு.
 

நெஞ்செரிச்சலை தடுக்க ஆறு கட்டளைகள் :-

1.வயிறு முழுவதும் நிரம்புமாறு தின்றுவிட்டு படுக்கைக்கு செல்லாதே ..

2.மெதுவாக சாப்பிடு 

3.இறுக்கமான ஆடைகளை அணியாதே 

4.புகைப்பதை நிறுத்து 

5.ஆல்கஹால் தவிர் 

6.தினமும் அதிகளவில் தண்ணீர் குடி

கொண்டைக்கடலை சாப்பிடுங்கள் :-

தினமும் மாலை வேளைகளில் ஸ்நாக்ஸாக ஒரு கப் கொண்டைக்கடலை சாப்பிடுங்கள்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூன்று எதிரிகள் :-

"நம்ம ஒடம்பு நாம் சொல்றத கேக்கணும்னா மூணு வெள்ளை எதிரிகள் கிட்ட இருந்து நாம தப்பிக்கணும்.
சர்க்கரை,வெள்ளை நிற அரிசி,மைதா இந்த மூணு உணவுப்பொருள் மீதும் ஆசை வைக்காம அதை தவிர்த்தால் ஆரோக்கியாமாக வாழலாம்" 

-ரஜினிகாந்த் பேச்சு

பழமே பலம்!

மாம்பழம்

இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ், புரதம் ஆகிய சத்துகள் மிகவும் குறைவாக இருக்கின்றன. மாவுச் சத்து, வைட்டமின் - சி ஆகிய சத்துகள் ஓரளவு இருக்கின்றன. மெக்னீஷியம், சோடியம், பொட்டாசியம், துத்தநாகம், கந்தகம் மற்றும் பீட்டா கரோட்டின் ஆகியவை நிறைந்து இருக்கின்றன. நார்ச் சத்து, சர்க்கரையின் அளவு மிகவும் அதிகம். மலச்சிக்கலைப் போக்கும். கண்களுக்கு மிகவும் நல்லது. சர்க்கரை நோயாளிகள், உணவுக்கு இடைப்பட்ட நேரத்தில் நாள் ஒன்றுக்கு இரண்டு அல்லது மூன்று துண்டுகள் மட்டுமே சாப்பிடலாம். 'கல்’ வைத்துப் பழுக்கவைக்கும் பழங்களைத் தவிர்ப்பது நல்லது.

பலாப்பழம்
புரதம், இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் ஆகிய சத்துகள் மிகவும் குறைவு. சிறிதளவு பீட்டா கரோட்டின், வைட்டமின் - சி சத்துகள் இருக்கின்றன. மெக்னீஷியம், சோடியம், கந்தகம், நார்ச் சத்து ஆகியவை ஓரளவு இருக்கின்றன. சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பதால், சர்க்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டாம். மலச் சிக்கலைப் போக்கி, நல்ல சக்தியைக் கொடுக்கும். உடலுக்கு மாவுச் சத்து தேவைப்படுபவர்கள், தினமும் நான்கு சுளைகள் எடுத்துக் கொள்ளலாம்.


வாழைப்பழம்
இதில் இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ், புரதம், நார்ச் சத்து ஆகியவை குறைவாக இருக்கின்றன. பீட்டா கரோட்டின், வைட்டமின் - சி ஆகிய சத்துகள் மிகக் குறைவு. மெக்னீஷியம் ஓரளவு இருக்கிறது. சர்க்கரை, மாவுச் சத்து அளவு மிகவும் அதிகம். இதய நோயாளிகளுக்கு நல்லது. ஜீரண சக்தியைக் கொடுக்கும். உடல் எடை குறைவாக இருப்பவர்கள் தினமும் காலை, இரவு என இரண்டு வேளையும் சாப்பிடலாம். அதிக எடை இருப்பவர்கள் தவிர்க்கவும்.
கிர்ணிப்பழம்
சர்க்கரை, இரும்பு, நார்ச் சத்து, மாவுச் சத்து ஆகியவை மிகக் குறைவாக இருக்கின்றன. பொட்டாஷியம், சோடியம் அதிகமாக இருப்பதால், சிறுநீரகப் பாதிப்பு இருப்பவர்கள் தவிர்க்க வேண்டும். வைட்டமின்-பி காம்ப்ளெக்ஸ் மற்றும் வைட்டமின் - சி ஓரளவு இருப்பதால் வயிற்றுப் புண்ணுக்கு மிகவும் நல்லது. உடலுக்கு நல்ல குளிர்ச்சியைத் தரும். சோர்வை நீக்கி, சக்தியைக் கொடுக்கும்.  

சாத்துக்குடி
வைட்டமின் - சி அதிக அளவு இருப்பதால், சருமத்தைப் பொலிவாக்கும். சர்க்கரை, மாவுச் சத்து ஆகியவை ஓரளவு இருக்கின்றன. இரும்பு, புரதம், கால்சியம், பாஸ்பரஸ் மிகவும் குறைந்த அளவே இருக்கின்றன. அதிக அளவு பொட்டாசியம் இருக்கிறது. இதனால், சிறுநீரகப் பாதிப்புக்கு உள்ளானவர்கள் சாப்பிட வேண்டாம். விளையாட்டு வீரர்களுக்குத் தசை வலுப் பெறுவதற்கும் நோயாளிகள் நோயில் இருந்து மீண்டு வருவதற்கும் சாத்துக்குடி மிகவும் நல்லது.


திராட்சை
உடலுக்குத் தேவையான ஆற்றலை அளிக்கும். இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் சர்க்கரை ஆகியவை அதிகமாக இருக்கின்றன. வைட்டமின் பி1, பொட்டாசியம், வைட்டமின் - சி குறைந்த அளவும் ஓரளவு நார்ச் சத்தும் இருக்கின்றன. அமிலத்தன்மை அதிகமாக இருப்பதால், மருந்து மாத்திரை உட்கொள்பவர்கள் இதனைத் தவிர்க்க வேண்டும். புளிப்புச் சுவை இருப்பதால், அசிடிட்டி, அல்சர், வாயு பிரச்னை, நெஞ்செரிச்சல் இருந்தால் சாப்பிடக் கூடாது. திராட்சையைக் கொட்டையுடன் சேர்த்து சாப்பிட்டால் நார்ச் சத்து உடம்பில் சேரும்.
மாதுளை
புரதம், கொழுப்பு, கால்சியம், இரும்புச் சத்து ஆகியவை மிகவும் குறைவாக இருக்கின்றன. மாவுச் சத்து, நார்ச் சத்து, நீர்ச் சத்து ஆகியவை மிகவும் அதிகமாக இருக்கின்றன. வைட்டமின் - சி, ஆக்சாலிக் ஆசிட் மற்றும் பொட்டாசியம், மெக்னீஷியம், கந்தகம் ஓரளவு இருக்கின்றன. உடலில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றும். இதயநோயாளிகளுக்கு மிகவும் நல்லது. கர்ப்பிணிப் பெண்கள் சாப்பிடலாம். நாக்கு வறண்டு போகாமல் இருக்கும். சோர்வு என்பதே இருக்காது.

அன்னாசிப் பழம்
சர்க்கரையின் அளவும் நார்ச் சத்தின் அளவும் மிகவும் அதிகமாக இருப்பதால், உடலுக்குத் தேவையான சக்தி உடனடியாகக் கிடைக்கும். கால்சியம், பாஸ்பரஸ் மிகவும் குறைந்த அளவே இருக்கின்றன. இரும்பு, வைட்டமின் - சி போன்றவை மிதமான அளவில் இருக்கின்றன.
பொட்டாசியம் அளவு குறைவாக இருப்பதால் சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள் ஓரளவு எடுத்துக்கொள்ளலாம். சர்க்கரை நோயாளிகள் தவிர்ப்பது நல்லது. மலச் சிக்கல் பிரச்னை வராது. ஜீரணிக்கும் தன்மை அதிகம்.

கொய்யாப் பழம்
நெல்லிக்காய் சாப்பிட முடியாதவர்கள் செங்காய்ப் பருவத்தில் உள்ள கொய்யாப் பழத்தைச் சாப்பிடலாம். நார்ச் சத்து மிக அதிகமாக இருக்கிறது. புரதம், பாஸ்பரஸ், இரும்பு, கால்சியம் மிகக் குறைந்த அளவும் வைட்டமின் - சி, பொட்டாசியம், சோடியம், மெக்னீஷியம் மற்றும் சர்க்கரை ஆகியவை ஓரளவும் இருக்கின்றன. சளி இருந்தால் சாப்பிடக் கூடாது என்பது தவறான கருத்து. பாலூட்டும் தாய்மார்கள் அதிகமாகச் சாப்பிடலாம். சர்க்கரை நோயாளிகள் குறைந்த அளவே எடுத்துக்கொள்ள வேண்டும். சில பழங்களில் சின்ன புழுக்கள் இருக்கும்.  துண்டுகளாக நறுக்கிப் பார்த்து, கவனமாக சாப்பிடவேண்டும்.

பப்பாளி
சர்க்கரை, பீட்டா கரோட்டின், வைட்டமின் - சி அதிகமாக இருக்கின்றன. நார்ச் சத்து இருப்பதால் மலச் சிக்கல் பிரச்னை இருக்காது. நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும். கண், தோல் என ஒட்டுமொத்த உடலையும் பாதுகாக்கக் கூடியது. அதனால் கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் நிறைய எடுத்துக்கொள்ளலாம். பழத்தை சாப்பிட்டதும், ஒரு டம்ளர் பால் குடிப்பது நல்லது. இதனால், உடம்பில் பீட்டா கரோட்டின் சத்து முழுவதுமாக சேரும். சர்க்கரை நோயாளிகள் ஓரளவு மட்டும் எடுத்துக்கொண்டால் போதுமானது.


சப்போட்டா
மாவுச் சத்து மிகுதியாக இருப்பதால், சர்க்கரை நோயாளிகள் தவிர்ப்பது நல்லது. கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் - சி ஆகியவை மிகக் குறைந்த அளவிலும், இரும்பு, பீட்டா கரோட்டின் போன்றவை ஓரளவும் இருக்கின்றன. ரத்த ஓட்டத்துக்கு மிகவும் நல்லது. பொட்டாசியம், மெக்னீஷியம் அதிகமாகவும், யூரிக் ஆசிட் சிறிதளவும் இருப்பதால் சிறுநீரகப் பாதிப்பு உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும்.  

திங்கள், 13 அக்டோபர், 2014

கொலஸ்ட்ரால் குறைக்க...

கொலஸ்ட்ரால் குறைக்க...
பிரேமா ச.இரா.ஸ்ரீதர்
``கொழுப்பைக் குறைக் கிறேன் என்று இடைவிடாமல் உடற்பயிற்சி, நடைப்பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுத்தால் மட்டும போதாது. உண்ணும் உணவிலும் கட்டுப்பாடு அவசியம். உணவின் மூலம் தேவையற்ற கொழுப்பைக் குறைத்து... உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும்” என்று சொல்லும் உணவு ஆலோசகர் யசோதரை கருணாகரன், கொலஸ்ட்ராலைக் குறைக்கும் சில உணவுகளைச் செய்து நமக்காக வழங்கியிருக்கிறார்.
‘‘உடலில் உள்ள செல்களின் செயல்பாடுகளுக்கு கொலஸ்ட்ரால் அவசியம். கல்லீரலில் இருந்து கொலஸ்ட்ராலை உடலில் உள்ள செல்களுக்கு எடுத்துச் செல்வது எல்.டி.எல் (Low Density Lipo protein). செல்களுக்குத் தேவைப்படாத அதிகப்படியான கொலஸ்ட்ராலைத் திரும்பவும் கல்லீரலுக்கே எடுத்துச் செல்வது எச்.டி.எல் (High Density Lipo protein). எச்.டி.எல்-ஐ நல்ல கொழுப்பு என்றும், எல்.டி.எல்-ஐ கெட்ட கொழுப்பு என்றும் சொல்கிறோம்.
உடலில் அதிகமான கொலஸ்ட்ரால் சேமிப்பைத் தடுக்க ஒரே வழி, எச்.டி.எல் அளவை உயர்த்துவதுதான். புகை பிடித்தலைத் தவிர்த்தல், உடல் எடையைக் குறைத்தல், ஒமேகா 3-யை உணவில்  அதிகம் சேர்த்துக்கொள்ளுதல் போன்றவற்றின் மூலம் எச்.டி.எல் கொழுப்பை உயர்த்தலாம்.  எல்.டி.எல்-ஐ அதிகரிக்கச் செய்யும் கொழுப்புச் சத்துக்கள் அடங்கிய உணவு வகைகளைத் தவிர்த்து, எச்.டி.எல் அளவை உயர்த்த உதவும் ஒமேகா 3 அடங்கிய உணவுகள், நார்ச்சத்து உணவுகள், வைட்டமின் சி மற்றும் தயாமின் உள்ள உணவுகளைத் தேர்ந்தெடுத்து உண்டுவந்தாலே கொலஸ்ட்ராலை எளிதில் குறைத்துவிடலாம்.  உடல் உழைப்புக்காக, நடைப்பயிற்சி, நீச்சல் பயிற்சி, உடற்பயிற்சிகளை நம் அன்றாட வாழ்வின் கடமையாக மேற்கொள்ளுதல் ஒன்றே, ஆரோக்கியத்துக்கான சிறந்த வழி.”
 முளைப்பயறு சோயா கிரேவி
தேவையானவை: முளைக்கட்டிய பாசிப்பயறு - 75 கிராம், சோயா உருண்டைகள் - 2 டேபிள்ஸ்பூன், பெரிய வெங்காயம் - 1 அல்லது 2, தக்காளி - 1, தனியா தூள், சீரகம், இஞ்சி பூண்டு விழுது - தலா ஒரு டீஸ்பூன், புதினா - ஒரு பிடி, வரமிளகாய் - 3, மிளகு - அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன், மல்லித்தழை, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: முளைக் கட்டிய பயறை மஞ்சள்தூள் சேர்த்து வேகவிடவும். சிறிது எண்ணெயைக் காயவைத்து மிளகு, சீரகம், வரமிளகாய் சேர்த்து வறுக்கவும். தக்காளியை நறுக்கி, அரைத்துக்  கொள்ளவும். மீதி எண்ணெயில், பொடியாக நறுக்கிய வெங்காயம், புதினாவைப் போட்டு, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கிக்கொள்ளவும். வறுத்த பொருட்கள், வதக்கிய கலவை இவற்றுடன் மல்லித்தழை சேர்த்து அரைத்துக்கொள்ளவும். வேகவைத்த பாசிப்பயறில், அரைத்த விழுது, தனியா தூள், அரைத்த தக்காளி, தேவையான உப்பு மற்றும் தண்ணீர் விட்டு, இரண்டு கொதி கொதிக்கவிடவும்.
சோயா உருண்டைகளை கொதிக்கும் நீரில் போட்டு, 5 நிமிடங்களுக்குப் பிறகு, நன்கு பிழிந்துஎடுத்து, பயறு குழம்பில் போடவும். கிரேவி பதத்தில் வந்ததும் இறக்கவும். சப்பாத்திக்கு நல்ல சைடு டிஷ் இது.
பயன்கள்: முளைக்கட்டிய பயறில் அதிக அளவு வைட்டமின் சி மற்றும் கரையும் நார்ச்சத்து உள்ளன. வைட்டமின் சி, கொலஸ்ட்ராலை உயர்த்தும், செம்பு மற்றும் துத்தநாக சத்துக்களின் அளவைக் கட்டுப்படுத்தும். சோயா பீன்சில் ஒமேகா 3 அதிகமாக உள்ளது. வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி - இவற்றில் நார்ச்சத்து அடங்கியுள்ளது. நல்லெண்ணெய், ரத்த நாளங்களில் கொழுப்பு  சேர்வதைத் தடுக்கிறது.
 வெந்தயக் கீரை சப்பாத்தி
தேவையானவை: கோதுமை மாவு - ஒரு கப், சோயா மாவு - 2 டேபிள்ஸ்பூன், வெந்தயக் கீரை - முக்கால் கப், மிளகாய்தூள் - கால் டீஸ்பூன், ஆலிவ் ஆயில் - அரை டீஸ்பூன், உப்பு, அரிசி தவிட்டு எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: கால் டீஸ்பூன் அரிசி தவிட்டு எண்ணெயில், பொடியாக நறுக்கிய வெந்தயக் கீரையைச் சேர்த்து வதக்கி, இறக்கும்போது, மிளகாய்தூள் சேர்த்து மேலும் வதக்கி இறக்கவும். கோதுமை மாவில் எல்லாப் பொருட்களையும் சேர்த்து, வெதுவெதுப்பான நீர்விட்டு, சப்பாத்தி மாவு பிசைந்துவைக்கவும். ஆலிவ் ஆயிலை, சப்பாத்தி மாவு பிசையும்போது சேர்க்காமல், சப்பாத்தியை இடும்போது, நடுவில் 2, 3 சொட்டு விட்டு தடவி, மீண்டும் மடித்துத் தேய்க்க வேண்டும். தோசை கல்லில், எண்ணெய் சேர்க்காமல் சப்பாத்திகளைச் சுட்டு எடுக்கவும்.
பயன்கள்: சோயா மாவு மற்றும் வெந்தயக் கீரையில் ஒமேகா 3 அடங்கி உள்ளது. வெந்தயக் கீரை, மீன் எண்ணெய்க்குச் சமம். ஆலிவ் ஆயிலிலும் ஒமேகா 3 உள்ளது. இந்தச் சப்பாத்தியில், அதிகப் புரதமும் நார்ச்சத்தும் வைட்டமின் ஏ சத்தும் இருக்கிறது. இவை எல்லாமே கொலஸ்ட்ராலைக் குறைக்கப் பெரிதும் உதவும்.  
 சிறுதானிய ஓட்ஸ் இட்லி
தேவையானவை: தினை அரிசி, இட்லி அரிசி - தலா 100 கிராம், உளுத்தம்பருப்பு - 50 கிராம், ஓட்ஸ் - 30 கிராம், மிளகு - ஒரு டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: தினை அரிசி, இட்லி அரிசி இரண்டையும் ஒன்றாகவும், உளுத்தம் பருப்பைத் தனியாகவும் ஊறவைத்து, இட்லிக்கு அரைப்பது போல அரைத்து, உப்பு சேர்த்துப் புளிக்கவைக்கவும். மறுநாள் காலை, ஓட்ஸ், சீரகம், மிளகு, கறிவேப்பிலை ஆகியவற்றை கரகரப்பாக அரைத்து, இட்லி மாவில் கலந்து, இட்லிகளாக வார்த்து, வேகவைத்து எடுக்கவும். இதற்கு, தக்காளி சட்னி ருசியாக இருக்கும்.
பயன்கள்: ஓட்ஸில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட், ரத்த நாளங்களில் கொலஸ்ட்ரால் சேமிப்பைத் தவிர்க்கும். கொழுப்பு சேர்ந்தவர்களுக்கு, தினை அரிசி ஒரு வரப்பிரசாதமாகும். இட்லி மாவைப் புளிக்கச் செய்வதன் மூலம், புரோபயாட்டிக்ஸ் உற்பத்தியாகும். இது, குடலில் நல்ல பாக்டீரியாக்களை அதிகரிக்கச் செய்யும்.
 வாழைப்பூ அடை
தேவையானவை: குதிரைவாலி அரிசி - 100 கிராம், மைசூர் பருப்பு - 30 கிராம், உளுத்தம்பருப்பு - 50 கிராம், முளைக்கட்டிய பாசிப்பயறு - 25 கிராம், வாழைப்பூ - முக்கால் கப், பெரிய வெங்காயம் - 1, வரமிளகாய் - 4 அல்லது 5, மல்லித்தழை - சிறிதளவு, கறிவேப்பிலை - சிறிதளவு, அரிசி தவிட்டு எண்ணெய், இந்துப்பு - தேவையான அளவு.
செய்முறை: வாழைப்பூவை சுத்தம் செய்து, பொடியாக நறுக்கவும். எல்லா வகைப் பயறு, பருப்பு, அரிசி வகைகளை ஒன்றாக தண்ணீரில் ஊறவைக்கவும். வெங்காயம், மல்லித்தழையைப் பொடியாக நறுக்கவும். இஞ்சி, உப்பு, வரமிளகாயை அரைத்து, இதனுடன் ஊறவைத்த பருப்பு வகைகளையும் சேர்த்து கரகரப்பாக அரைக்கவும். அரைத்த மாவில், பொடியாக நறுக்கிய வாழைப்பூ, வெங்காயம், மல்லித்தழை, கறிவேப்பிலை சேர்த்துக் கலக்கவும். தோசைக் கல்லில் எண்ணெய் தடவி அடைகளாக வார்க்கவும். மூடி போட்டு, வேகவிட்டு எடுக்கவும்.
பயன்கள்: குதிரைவாலி, முளைக்கட்டிய பயறு ஆகியவை கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும். மைசூர் பருப்பு, அடை மிருதுவாக இருக்க உதவுவதோடு, புரதம் மற்றும் இரும்புச் சத்தைத் தரும். வாழைப்பூ, வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லியில் உள்ள நார்ச்சத்து, கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவியாக இருக்கும்.