செவ்வாய், 31 ஜனவரி, 2017

நம்புங்கள்! எதிரிகள் தான் உங்கள் வெற்றிக்கு முக்கியக் காரணம்! #MondayMotivation

கடைசியா மிச்சமிருந்த ஒரே ஒரு அரசு விடுமுறையான கிருஸ்துமஸை ஞாயிற்றுக்கிழமை எடுத்துக்கொண்ட சோகத்துடன் இந்த வாரம் தொடங்கிறது. அடுத்த ஆண்டின் முதல் அரசு விடுமுறையான ஆங்கில வருடப்பிறப்பையும் இன்னொரு சண்டே எடுக்கப்போகிறது. இருந்தாலும் இந்த ஆண்டின் கடைசி வாரத்தை வெற்றிகரமாக கடக்கவும் இனி வரும் வாரங்களுக்கும் சில #Mondaymotivation டிப்ஸ்...
செமையா தூங்குங்க - பார்ட்டி,அவுட்டிங் எல்லாத்தையும் வெள்ளி, சனிக்கிழமைகளின் மாலைகளில் முடித்துவிடுங்கள். ஞாயிறு மாலை என்பது திங்கள் கிழமையின் ஆரம்பம் என வைத்துக்கொள்ளுங்கள். 8 மணிக்கே டின்னர் + வாழைப்பழம்,பாலுடன் முடித்துக்கொள்ளுங்கள். (வாழைப்பழமும் பாலும் தூக்கத்தை தூண்டும்) அது போல சாப்பிட்ட உடனே தயவு தாட்சன்யமின்றி மொபைலின் வைபை மற்றும் மொபைல் டேட்டாவை அணைத்து வைத்துவிடுங்கள். புத்தகங்கள் படிக்கலாம். எப்படியும் 1 மணி நேரத்துக்குள் தூக்கம் வந்துவிடும். பரபரப்பான வாரத்தை எதிர்கொள்ள நல்ல தூக்கம் அவசியம். 
மனதை தயார் செய்யுங்கள் - என்னதான் சீக்கிரமே படுத்தாலும் காலையில் இன்னும் கொஞ்சம் இன்னும் கொஞ்சம் என தூங்கி அரக்க பரக்கத்தான் கிளம்புவோம். அந்த நேரத்தில் அதாவது ப்ரஷில் பேஸ்டை வைத்து கண்ணாடி பார்க்கையில் "இதெல்லாம் ஒரு மண்டேயா?" போன வாரம் 9 மணி வரைக்கு தூங்கிட்டு ஆபிஸ் போனேமே" - என்ன பிரச்சினை வந்தாலும் சமாளித்துவிடமாட்டோமா நாம யாரு" என உங்களுக்கு நீங்களே தைரியம் சொல்லிக்கொள்ளவேண்டும்.(வேறு வழி)  
பட்டியல் போடுங்கள் - எப்படியும் இரண்டுக்கும் மேற்பட்ட வேலைகள் காத்திருக்கும். அது இல்லாமல் அலுவலகம் போனவுடன் மேலாளர் புதிதாக எதையும் உங்கள் தலையில் கட்டும் வாய்ப்பும் இருப்பதால் கையில் இருப்பதில் உடனே முடிக்க வேண்டிய வேலைகள் எவை எவை என லிஸ்ட் போடுங்கள். அதுதான் புதிதாய் வரப்போகும் வேலைகளிலிருந்து உங்களை காக்கும். இந்த லிஸ்ட்டை ஞாயிறு இரவே போட்டு வைத்துக்கொள்வது இன்னும் நல்லது. 
வேறு வேலைகளை உருவாக்குங்கள் - அலுவலக வேலைகள் தாண்டி வேறு என்னவெல்லாம் இந்த வாரம் செய்யவேண்டியது இருக்கு என்பதை நினைவில் கொள்ளுங்கள். உதாரணத்துக்கு புதன் அன்று ஒரு படத்துக்கு போகவேண்டி இருந்தால் அதற்கு டிக்கட் புக் செய்து உங்களை என்கேஜ் செய்து கொள்ளுங்கள். பெரும்பாலும் அலுவலகம் முடியும் நேரத்தில் போக வேண்டிய ஒரு சின்ன வேலையாவது வைத்துக்கொள்ளுங்கள். இது பகலில் உங்கள் வேலையில் கவனம் சிதறாமல் தடுக்கும். 
தொலைபேசுங்கள் - தினமும் ஒரு உறவினருடனோ, அடிக்கடி பார்த்துக்கொள்ளமுடியாத நண்பர்கள் இவர்களுடனோ போன் செய்து பேசுங்கள். உங்களின் அலுவலகம் சார்ந்த மனநிலையிலிருந்து உங்களுக்கு இருக்கும் வேறு ஒரு உலகத்தை உணரவைக்கும். வேலை அழுத்தத்தை வெல்ல இது ஒரு வெற்றிகரமான வழி. உதாரணத்துக்கு உங்கள் நண்பர் ஒருவருக்கு போன் செய்து "வேலையெல்லாம் எப்படி போகிறது" என்று கேட்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம். அதற்கு அவர் பெரிததொரு புலம்பலை வெளிப்படுத்தும் போது "அப்பாடா நம்ம வேலை எவ்வளவோ பரவாயில்லை" என்கிற நிம்மதி உங்களுக்கு ஏற்படும் அல்லவா.
மானசீக எதிரிகளை உருவாக்குங்கள் - அலுவலகத்தில் எதிரிகளுக்கு சொல்லவே வேண்டாம். நீங்கள் உருவாக்க வேண்டாம் அவர்களே உருவாகிவிடுவார்கள். அப்படி ஒருத்தர் இல்லையெனில் மனதுக்குள்  உடன் வேலை செய்பவரை உங்கள் ப்ரிய எதிரியாக  உருவகித்து அவரை விட அதிகம் வேலை செய்வதை உங்கள் லட்சியமாக வைத்து செயல்படுங்கள். போட்டி இருந்தால்தான் வெல்ல முடியும். நாய் துரத்தாமல் நீங்கள் ஓடமாட்டீர்கள். நீங்கள் நம்பினாலும், நம்பாவிட்டாலும் உங்கள் வெற்றிக்கு முதல், முக்கிய காரணமாக இருப்பது உங்கள் எதிரிகள்தான்! எனவே மனதுக்குள்ளாகவே ஒரு எதிரி கட்டாயம் தேவை உங்களின் வெற்றிக்கு. இனிய வாரத்துக்கு வாழ்த்துக்கள். 

வெற்றி பெற ஜெஃப் சாண்டர்ஸ் சொல்லும் 10 சூத்திரங்கள் என்ன தெரியுமா? #MorningMotivation

வெற்றி பெற ஜெஃப் சாண்டர்ஸ் சொல்லும் 10 சூத்திரங்கள் என்ன தெரியுமா? #MorningMotivation


 
 
''வாழ்வின் குறிக்கோள் வெற்றி. அந்த வெற்றியைப் பெற, சில ஒழுங்குபடுத்தப்பட்ட பழக்கவழக்கங்கள் தேவையாக இருக்கின்றன. சாதனையாளர்களிடம் காணப்படும் இந்தப் பழக்கவழக்கங்களைப் பின்பற்றினால், வெற்றி நிச்சயம் உங்கள் வாசலையும் தட்டும்'' என்று சொல்கிறார் அமெரிக்காவைச் சேர்ந்த ஜெஃப் சாண்டர்ஸ். சிறப்பான சுயமுன்னேற்ற உரையாளர்.  வெற்றிக்காக அவர் வட்டமிட்டுக் காட்டும் 10 மந்திரங்கள் இங்கே!  

1. சிந்தியுங்கள்! 
சாதனையாளர்கள் தினமும் சிந்திப்பார்கள். மனித மூளை மிகவும் ஆற்றல்மிக்க ஒன்று. எனவே நோக்கத்துடன் சிந்திக்கும் பழக்கத்தை உருவாக்கிக்கொள்ளுங்கள். துறை சார்ந்த சிரமமான காரியங்களில், உங்களை நீங்களே ஒரு கடினமான கேள்வி கேட்டு, அதற்கான பதிலைக் கண்டடைய வேண்டும். இதன் மூலம் சவால்கள் எவ்வளவு பெரியதாக இருந்தாலும் அதற்கான தீர்வு இருந்தே தீரும் என்கிற நம்பிக்கை பிறக்கும்.

2. மனதிற்குப் பிடித்த உடற்பயிற்சி! 
உடற்பயிற்சி என்றவுடன், சிக்ஸ் பேக், எய்ட் பேக் மற்றும் ஸீரோ சைஸுக்காக உழைப்பது மட்டுமேயல்ல.  நீச்சல், சைக்ளிங், தோட்ட வேலைகள், நாய்க்குட்டி உடன் விளையாடுவது என உடல், மனம் இரண்டுக்கும் புத்துணர்வு தரக்கூடிய ஓர் எளிய பயிற்சியைத் தேர்வு செய்து, அதை தினமும் மேற்கொள்ளுங்கள்.  

3. சீக்கிரம் எழுந்தால்..!
அதிகாலையில் சூரியன் உதிக்கும் முன் எழுந்திரிக்க வேண்டியதில்லை என்றாலும் சற்று முன்னர் எழுந்தால் நீங்கள் செய்யப்போகும் வேலையில் தெளிவும் படைப்பாற்றலும் சற்றே அதிகமாக இருக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும், விடிகாலை எழும் பழக்கமுள்ளவர்கள் ஆக்கவளம் கொண்டவர்களாகக் காணப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சீரான தூக்கப்பழக்கம் மிகவும் முக்கியமான ஒன்று. 

4. ஆரோக்கிய உணவு!
நம் ஆரோக்கியம், நாம் உண்ணும் உணவுகளையே பெரிதும் சார்ந்திருக்கிறது. உங்கள் மனத் தெளிவு, உணர்ச்சிகள், சக்தி, சுறுசுறுப்பு அனைத்தையும் முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் அமைப்பதற்கான ஆற்றலைப் பெற, ஆரோக்கிய உணவு மிகவும் அவசியம்.

5. அத்தியாவசியங்களுடன் மட்டுமே வாழ்ந்திருங்கள்!
உங்கள் அலுவல் மேசையில் தேவையில்லாமல் குவிந்துகிடக்கும் பொருட்களைக் கழித்துவிட்டால், மிச்சமிருப்பது அத்தியாவசியங்கள் மட்டுமே. அந்த அவசியத் தேவைப் பொருட்களை தரமானவையாக வாங்குங்கள். மற்றவர்களிடம் உங்களுக்கான மரியாதையைப் பெற்றுக்கொடுப்பது, குணம் மட்டுமல்ல உடைமைகளும்தான். குப்பைக்கு நடுவில் அமர்ந்திருக்கும் ஊழியரைக் காணும் கண்களிடம் மதிப்பிருக்காது. 

6. அவசியமற்ற கருத்துகளுக்கு காது கொடுக்காதீர்கள்! 
உங்கள் வாழ்க்கை சம்பந்தப்பட்ட முடிவுகள், எப்போதும் நீங்கள் எடுக்கும் முடிவுகளாக இருக்க வேண்டும். மற்றவர்களிடம் கருத்துக் கேட்டு சிக்கலாக்கிக்கொள்ளாமல் சிறந்த, தெளிவான முடிவுகளை எடுங்கள். வெற்றியாளர்கள் முற்போக்கான உறவுகளை எடுத்துச் செல்வதில் மிகவும் திறமையானவர்கள். ஏனெனில், அவசியம் இல்லாத கருத்துகளை அவர்கள் கவனத்தில் கொள்வதில்லை.

7. இன்று மட்டுமே நிஜம்!
நேற்று என்பது இன்றில்லை. நாளை என்பதில் நிஜமில்லை. இரண்டுமே நினைவுகள் மற்றும் எதிர்பார்ப்புகளின் வெளிப்பாடுதான். எனவே நீங்கள் வாழவேண்டியது இன்று, இந்த நொடி மட்டுமே. இன்றைய தினத்தை எவ்வாறு சிறப்பாக முடிப்பது என்ற யோசனை மட்டுமே தேவை. அந்தச் சிந்தனை மட்டுமே செய்யும் செயல்களில் கவனத்தைக் கொண்டுவரும். எதிர்காலத்தைப் பற்றிய பயத்தையும் கடந்த காலத்தின் வருத்தங்களையும் கணக்கில் கொள்ளாமல் தெளிவாகச் செயல்படுபவர்களே வெற்றியாளர்களாகக் கருதப்படுகிறார்கள். 

8. பணி நேர்த்தி அவசியம்!
உங்களின் வாட்ஸ்அப் இன்பாக்ஸ் முதல் மெயில் இன்பாக்ஸ் வரை அனைத்திலும், தினமும் வரும் மெஸேஜ்களை முழுவதுமாக ஓபன் செய்து, அதற்கான பதிலை அன்றே அனுப்பிவிடுதலை முடிந்தவரை கடைப்பிடியுங்கள். அன்றைய வேலையை அன்றே முடிக்கப் பழகிவிட்டாலே, பணி நேர்த்தி கைகூடிவிடும். 

9. உங்களை வளர்த்துக்கொள்ளுங்கள்!
எந்தத் துறையாக இருப்பினும், யாராக இருப்பினும் வெற்றியடைய சுயமுன்னேற்றம் மிகவும் முக்கியமான ஒன்று. கற்கும் பாடங்களில் இருந்தும் அனுபவங்களில் இருந்தும் உங்களை நீங்களே வளர்த்துக்கொள்ள வேண்டும். அதிர்ஷ்டத்தை எண்ணி உட்கார்ந்திருக்காமல், 'என் வெற்றி எனக்கானது. என் உழைப்பைச் சார்ந்தது. அதற்கு என்னை நானே முன்னேற்றிக்கொள்வது முக்கியம்' என்று நினைக்க வேண்டும். இதை நடைமுறையில் கொண்டுவர, ஒரு நல்ல சுயமுன்னேற்றப் புத்தகத்தைத் தேர்வு செய்து வாசிக்க ஆரம்பிக்கலாம்.  

10. அச்சம் தரும் விஷயங்களை தினமும் முயலுங்கள்! 

வெற்றியாளர்களுக்கும் மற்றவர்களுக்குமான ஒரே வித்தியாசம்... தங்கள் பயம், துயரம் எதையும் பொருட்படுத்தாமல் அடுத்த நிலையை நோக்கி முன்னேறிக்கொண்டே இருப்பது. பயம், பதற்றம், சந்தேகம் இவை அனைத்தும் எல்லோருக்கும் இருப்பவையே. ஆனால் இதுபோன்ற எதிர்மறை விஷயங்களுக்கு இடம் கொடுக்காமல் இலக்கை நோக்கி பயணம் செய்பவர்கள் மட்டுமே வெற்றியாளர்கள் ஆவார்கள்.'' 

மூவ் ஆன்!

- எஸ். எம். கோமதி