செவ்வாய், 31 ஜனவரி, 2017

நம்புங்கள்! எதிரிகள் தான் உங்கள் வெற்றிக்கு முக்கியக் காரணம்! #MondayMotivation

கடைசியா மிச்சமிருந்த ஒரே ஒரு அரசு விடுமுறையான கிருஸ்துமஸை ஞாயிற்றுக்கிழமை எடுத்துக்கொண்ட சோகத்துடன் இந்த வாரம் தொடங்கிறது. அடுத்த ஆண்டின் முதல் அரசு விடுமுறையான ஆங்கில வருடப்பிறப்பையும் இன்னொரு சண்டே எடுக்கப்போகிறது. இருந்தாலும் இந்த ஆண்டின் கடைசி வாரத்தை வெற்றிகரமாக கடக்கவும் இனி வரும் வாரங்களுக்கும் சில #Mondaymotivation டிப்ஸ்...
செமையா தூங்குங்க - பார்ட்டி,அவுட்டிங் எல்லாத்தையும் வெள்ளி, சனிக்கிழமைகளின் மாலைகளில் முடித்துவிடுங்கள். ஞாயிறு மாலை என்பது திங்கள் கிழமையின் ஆரம்பம் என வைத்துக்கொள்ளுங்கள். 8 மணிக்கே டின்னர் + வாழைப்பழம்,பாலுடன் முடித்துக்கொள்ளுங்கள். (வாழைப்பழமும் பாலும் தூக்கத்தை தூண்டும்) அது போல சாப்பிட்ட உடனே தயவு தாட்சன்யமின்றி மொபைலின் வைபை மற்றும் மொபைல் டேட்டாவை அணைத்து வைத்துவிடுங்கள். புத்தகங்கள் படிக்கலாம். எப்படியும் 1 மணி நேரத்துக்குள் தூக்கம் வந்துவிடும். பரபரப்பான வாரத்தை எதிர்கொள்ள நல்ல தூக்கம் அவசியம். 
மனதை தயார் செய்யுங்கள் - என்னதான் சீக்கிரமே படுத்தாலும் காலையில் இன்னும் கொஞ்சம் இன்னும் கொஞ்சம் என தூங்கி அரக்க பரக்கத்தான் கிளம்புவோம். அந்த நேரத்தில் அதாவது ப்ரஷில் பேஸ்டை வைத்து கண்ணாடி பார்க்கையில் "இதெல்லாம் ஒரு மண்டேயா?" போன வாரம் 9 மணி வரைக்கு தூங்கிட்டு ஆபிஸ் போனேமே" - என்ன பிரச்சினை வந்தாலும் சமாளித்துவிடமாட்டோமா நாம யாரு" என உங்களுக்கு நீங்களே தைரியம் சொல்லிக்கொள்ளவேண்டும்.(வேறு வழி)  
பட்டியல் போடுங்கள் - எப்படியும் இரண்டுக்கும் மேற்பட்ட வேலைகள் காத்திருக்கும். அது இல்லாமல் அலுவலகம் போனவுடன் மேலாளர் புதிதாக எதையும் உங்கள் தலையில் கட்டும் வாய்ப்பும் இருப்பதால் கையில் இருப்பதில் உடனே முடிக்க வேண்டிய வேலைகள் எவை எவை என லிஸ்ட் போடுங்கள். அதுதான் புதிதாய் வரப்போகும் வேலைகளிலிருந்து உங்களை காக்கும். இந்த லிஸ்ட்டை ஞாயிறு இரவே போட்டு வைத்துக்கொள்வது இன்னும் நல்லது. 
வேறு வேலைகளை உருவாக்குங்கள் - அலுவலக வேலைகள் தாண்டி வேறு என்னவெல்லாம் இந்த வாரம் செய்யவேண்டியது இருக்கு என்பதை நினைவில் கொள்ளுங்கள். உதாரணத்துக்கு புதன் அன்று ஒரு படத்துக்கு போகவேண்டி இருந்தால் அதற்கு டிக்கட் புக் செய்து உங்களை என்கேஜ் செய்து கொள்ளுங்கள். பெரும்பாலும் அலுவலகம் முடியும் நேரத்தில் போக வேண்டிய ஒரு சின்ன வேலையாவது வைத்துக்கொள்ளுங்கள். இது பகலில் உங்கள் வேலையில் கவனம் சிதறாமல் தடுக்கும். 
தொலைபேசுங்கள் - தினமும் ஒரு உறவினருடனோ, அடிக்கடி பார்த்துக்கொள்ளமுடியாத நண்பர்கள் இவர்களுடனோ போன் செய்து பேசுங்கள். உங்களின் அலுவலகம் சார்ந்த மனநிலையிலிருந்து உங்களுக்கு இருக்கும் வேறு ஒரு உலகத்தை உணரவைக்கும். வேலை அழுத்தத்தை வெல்ல இது ஒரு வெற்றிகரமான வழி. உதாரணத்துக்கு உங்கள் நண்பர் ஒருவருக்கு போன் செய்து "வேலையெல்லாம் எப்படி போகிறது" என்று கேட்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம். அதற்கு அவர் பெரிததொரு புலம்பலை வெளிப்படுத்தும் போது "அப்பாடா நம்ம வேலை எவ்வளவோ பரவாயில்லை" என்கிற நிம்மதி உங்களுக்கு ஏற்படும் அல்லவா.
மானசீக எதிரிகளை உருவாக்குங்கள் - அலுவலகத்தில் எதிரிகளுக்கு சொல்லவே வேண்டாம். நீங்கள் உருவாக்க வேண்டாம் அவர்களே உருவாகிவிடுவார்கள். அப்படி ஒருத்தர் இல்லையெனில் மனதுக்குள்  உடன் வேலை செய்பவரை உங்கள் ப்ரிய எதிரியாக  உருவகித்து அவரை விட அதிகம் வேலை செய்வதை உங்கள் லட்சியமாக வைத்து செயல்படுங்கள். போட்டி இருந்தால்தான் வெல்ல முடியும். நாய் துரத்தாமல் நீங்கள் ஓடமாட்டீர்கள். நீங்கள் நம்பினாலும், நம்பாவிட்டாலும் உங்கள் வெற்றிக்கு முதல், முக்கிய காரணமாக இருப்பது உங்கள் எதிரிகள்தான்! எனவே மனதுக்குள்ளாகவே ஒரு எதிரி கட்டாயம் தேவை உங்களின் வெற்றிக்கு. இனிய வாரத்துக்கு வாழ்த்துக்கள். 

கருத்துகள் இல்லை: