1. அறஞ்செய விரும்பு.
(பொழிப்புரை) நீ தருமம் செய்ய ஆசைப்படு.
2. ஆறுவது சினம்.
(பொழிப்புரை) கோபம் தணியத் தகுவதாம்.
3. இயல்வது கரவேல்.
(பொழிப்புரை) கொடுக்க முடிந்த பொருளை இரப்பவர்க்கு ஒளியாமல் கொடு.
4. ஈவது விலக்கேல்.
(பொழிப்புரை) ஒருவர் மற்றொருவர்க்குக் கொடுப்பதைக் கொடுக்க வேண்டாமென்று நீ தடுக்காதே.
5. உடையது விளம்பேல்.
(பொழிப்புரை) உன்னுடைய பொருளைப் பிறர் அறியும்படி சொல்லாதே.
உன்னுடைய பொருளை அல்லது கல்வி முதலிய சிறப்பை நீயே புகழ்ந்து பேசவேண்டா.
6. ஊக்கமது கைவிடேல்.
(பொழிப்புரை) நீ எத்தொழில் செய்யும்பொழுதும் மனவலிமை யினைக் கைவிடாதே. (அது: பகுதிப்பொருள் விகுதி.)
7. எண்ணெழுத் திகழேல்.
(பொழிப்புரை) கணிதத்தையும், இலக்கணத்தையும் இகழாமல் நன்றாகக் கற்றுக்கொள். (கணிதம் - கணக்கு.)
8. ஏற்ப திகழ்ச்சி.
(பொழிப்புரை) இரந்துண்டு வாழ்வது பழிப்பாகையால் நீ ஒருவரிடத்தும் சென்று ஒன்றை வேண்டாதே.
9. ஐய மிட்டுண்.
(பொழிப்புரை) இரப்பவர்க்குப் பிச்சையிட்டுப் பின்பு நீ உண்ணு.
ஏழைகட்கும், குருடர் முடவர் முதலானவர்கட்கும் பிச்சையிட வேண்டும்.
10. ஒப்புர வொழுகு.
(பொழிப்புரை) உலகத்தோடு பொருந்த நடந்துகொள்.
11. ஓதுவ தொழியேல்
11. ஓதுவது, ஒழியேல்
(பொழிப்புரை) அறிவு தரும் நல்ல நூல்களை நீ எப்பொழுதும் படித்துக்கொண்டிரு.
12. ஒளவியம் பேசேல்.
(பொழிப்புரை) நீ ஒருவரிடத்தும் பொறாமைகொண்டு பேசாதே.
13. அஃகஞ் சுருக்கேல்.
(பொழிப்புரை) மிகுந்த இலாபத்துக்கு ஆசைப்பட்டுத் தானியங்களைக் குறைத்து விற்காதே.
14. கண்டொன்று சொல்லேல்.
(பொழிப்புரை) கண்ணாற் கண்டதற்கு மாறாகச் சொல்லாதே. (பொய்ச்சாட்சி சொல்லலாகாது.)
15. ஙப்போல் வளை. (பொழிப்புரை) ஙஎன்னும் எழுத்தானது தான்பயனுடையதாயிருந்து பயனில்லாத ஙா முதலிய தன் வருக்க எழுத்துகளைத் தழுவிக் கொள்ளுதல் போல, நீ பயனுடையவனாயிருந்து உன் இனத்தார் பயனில்லாதவராயினும் அவரைத் தழுவிக்கொள். [ஙா முதலிய பதினொரெழுத்தும் எந்தச் சொல்லிலும் வருவதில்லை. ஙகரத்தின் பொருட்டே அவற்றையும் சுவடியில் எழுதுகிறார்கள். இனி இதற்கு ஙகர வொற்றானது அகரவுயிர் ஒன்றையே தழுவுவது போல நீ ஒருவனையே தழுவு என மாதர்க்குக் கூறியதாகவும் பொருள் சொல்லலாம்.]
16. சனிநீ ராடு.
(பொழிப்புரை) சனிக்கிழமைதோறும் எண்ணெய் தேய்த்து முழுகு.(புதன்கிழமைகளிலும் முழுகலாம்.)
17. ஞயம்பட வுரை.
(பொழிப்புரை) கேட்பவர்களுக்கு இன்ப முண்டாகும்படி இனிமை யாகப் பேசு. [நயம் என்பதன் போலி.]
18. இடம்பட வீடு எடேல்
(பொழிப்புரை) அளவுக்குமேல் இடம் வீணாய்க் கிடககும்படி வீட்டைப்பெரிதாகக் கட்டாதே. ''சிறுகக் கட்டிப் பெருக வாழ்'' என்பது பழமொழி.
19. இணக்கமறிந் திணங்கு
(பொழிப்புரை) நற்குண நற்செய்கை உடையவ ரென்பது தெரிந்து கொண்டு ஒருவரோடு நட்புச் செய.
20. தந்தைதாய்ப் பேண்
(பொழிப்புரை) உன் தாய் தந்தையரை அன்புடன் போற்றிக் காப்பாற்று.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக