சனி, 4 மே, 2013

பயன் யாருக்குக் கிடைக்கும்?


துறவி ஒருவர் ஆற்றங்கரையில் இருந்த கோயில் ஒன்றின் முன்பு தியானத்தில் ஆழ்ந்திருந்தார். அவரைத் தேடி வருபவர்களுக்கு அருளுரைகள் சொல்வது அவரது வழக்கம்.

ஒரு சமயம் மக்கள் அவரைச் சூழ்ந்திருந்த வேளையில், “முள்ளை முள்ளால்தான் எடுக்க முடியும். அதுபோல் ஆழ்ந்த பக்தியால்தான் பக்தியின் தலைவனான இறைவனை அடைய முடியும்” என்றார்.

இதைக் கேட்ட ஒரு விவசாயி, துறவியின் அறிவுரையைப் பின்பற்றினால் என்ன? என்று சிந்தித்தார்.

வயலுக்குச் சென்ற அவர், சேற்றில் இறங்கி வேலை செய்தார். பின்னர் துறவி சொன்னது போல் முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும் என்பது போல் சேற்றை சேற்றால் கழுவ வேண்டும் என்று முடிவு செய்து சேற்றால் சேற்றைச் சுத்தம் செய்ய முயன்று கொண்டிருந்தார்.

அவரின் செயலைப் பார்த்த வழிப்போக்கர் ஒருவர், “என்ன அறிவீனம் இது? சேற்றைத் தண்ணீரில் கழுவாமல் சேற்றாலேயே கழுவினால் சேறு எப்படி சுத்தமாகும்?” என்றார்.

உடனே அந்த விவசாயி, துறவி சொன்ன கருத்தை வழிப்போக்கரிடம் சொன்னார்.

துறவி சொன்ன சரியான கருத்து முட்டாள் மனிதர்களிடம் உண்டாக்கியுள்ள விபரீதத்தை உணர்ந்தார்.

அவர் அங்கிருந்து ஆற்றங்கரையிலிருக்கும் துறவியைப் போய்ச் சந்தித்து நடந்ததை சொன்னார்.

யோகி வழிப்போக்கரிடம், “குளத்தில் பெய்த மழை குடிநீராகும். கடலில் பெய்த மழை உப்பு நீராக மாறுவதைப் போல் நல்லவர்கள் சொல்லும் வார்த்தைகள் அறிவுடையவர்களைச் சென்றடைந்தால் மட்டுமே பயன் தரும்” என்றார்.

கருத்துகள் இல்லை: